ⓒ Hindu Tamil
சென்னை மத்திய சிறையில் 1999ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘சொர்க்கவாசல்’. ஓய்வு பெற்ற நீதிபதி இஸ்மாயில் தலைமையிலான விசாரணைக் குழுவின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. சிறையில் உள்ள ரவுடி சிகா (செல்வராகவன்) திருந்தி வாழ ஆசைப்படுகிறார். ஆனால், புதிய காவல் அதிகாரி அவரை முடக்க முயற்சிக்கிறார். இந்த சூழலில், செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார் பார்த்திபன் (ஆர்.ஜே. பாலாஜி). சிறையின் கொடுமைகள் அவரை துரத்த, பெரும் கலவரம் வெடிக்கிறது. பார்த்திபன் அதில் சிக்கித் தவிக்கிறார். இறுதியில் அவர் விடுதலையாகிறாரா என்பதுதான் கதை.
இயக்குனர் சித்தார்த், சிறை வாழ்க்கையின் இருள், கருணையற்ற முகங்கள், மற்றும் அன்பு நிறைந்த உள்ளங்களை அழகாக சித்தரித்துள்ளார். மும்மதங்களைச் சேர்ந்தவர்கள், திருநங்கைகள், இலங்கைத் தமிழர்கள் என பல்வேறு தரப்பினர் சிறையில் இருப்பது காட்டப்பட்டுள்ளது. புத்தர், அம்பேத்கர், பைபிள் என அனைத்து மதங்களுக்கும் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் நடக்கும் சண்டைக் காட்சிகள், திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள், தனிமைச் சிறையின் கொடுமை, அதிகார துஷ்பிரயோகம் என பல அம்சங்கள் படத்தில் உள்ளன. அதே நேரத்தில், அன்பு, நேர்மை, உணர்வுகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு முழுமையான திரையனுபவத்தை படம் வழங்குகிறது.
ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ஆனால், செல்வராகவனின் தேர்வு சரியில்லை எனத் தோன்றுகிறது. கருணாஸ் அதிகாரத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கிறிஸ்டோ சேவியரின் இசையும், பிரின்ஸ் ஆன்டர்சனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. ஒட்டுமொத்தமாக, கதைக்களத்திற்கு நேர்மையான, ஈர்க்கும் படைப்பாக ‘சொர்க்கவாசல்’ அமைந்துள்ளது.